Click Here for Free Traffic!
Click Here for your Free Traffic!

Your Ad Here

8. காயாம் பூ அரணங்கள்

8. காயாம் பூ அரணங்கள்
***************************

"ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற
அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு
ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம்
கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க்
காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க
பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப்
பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது இந்தப் பாடல். (விண்ணவச் சுடராழி ஆ.எதிராசன் எழுதிய "108 வைணவவ திவ்ய தேச வரலாறு" என்ற பொத்தத்தில் உள்ள விவரங்கள் இந்தப் பாடலுக்குப் பின்புலம்.)

கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப்போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) "ஆதி மூலமே" எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். "ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்" எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். "கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்" என்பது திருமங்கையாரின் வாக்கு.

கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப்போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.

கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,"நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்" என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், "ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக" என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,"வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு" என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.

திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. "வையம் தகளியாய்" என்று பொய்கையாரும், "அன்பே தகளியாய்" என்று பூதத்தாரும், "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.

7.கதம் எட்டும் ஓர் இடத்தில்

7.கதம் எட்டும் ஓர் இடத்தில்
*******************************

ஆற்று ஓரம் பொன்னி மடி, அரங்கினிலே சாய்ந்தபடி
அறி துயிலில் பள்ளி கொண்டும்(a)
அலங்கார கோலத்தில் எழு மலையைத் தாண்டி ஒரு
ஆட்சி நிலை உள்ளிக் கொண்டும்(b)
வீற்று ஓங்கும் கேழலாய்(c) வெம் புவியை மருப்பு(d) ஏற்றும்
விளையாட்டில் முகிழ்த்திக் கொண்டும்(e)
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நடங் காட்ட விழைந்த படி
வெளுந் தோய மலையைக் கொண்டும்(f)
ஆற்று ஆடும் சாலகத்தும்(g), அலக நதை நேமிக் கா(டு)(h)
அருள் இலந்தப் புரத்தி லேயும்(i)
அம்பு நிறைப் புழைக் கரத்தும்(j) தான்தோன்றி(k)த் திருமேனி
அழகுறவே வெளித்து நிற்க
கால் தாழச் சேர்ந்தார்க்கு கதம் எட்டும்(l) ஓர் இடத்தில்(m)
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

"நாராயணாய நமக"
என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சிறப்பிட்டுக் குறிப்பிடும் எட்டுத் திருத்தலங்களை இப்பாடல் பேசுகிறது.

(a) திருவரங்கம்
(b) திருவேங்கடம்
(c)
கேழல் = வராகம்(அவதாரம்), காட்டுப் பன்றி
(d) மருப்பு = கொம்பு, தந்தம்
(e)
திருமுகிழ்நம் > திருமுகிணம் > திருமுசிணம் > ஸ்ரீ முஷ்ணம்;
முகிழ்த்தது = தோன்றியது; பூவராகர் எனப் பெயர்கொண்ட மூலவர் திருமேனி மிகச் சிறியதாய் முகிழ்த்தது இந்தத் தலத்தின் சிறப்பு.
(f)
திரு தோய் மலை = திருநீர்மலை; தோய் = பால், நீர்; திருத்தோய் மலையில் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களோடு, நடந்த கோலத்தையும் காட்டியதாய்ச் சொல்லுவது விண்ணவர் மரபு. தோயத்து அத்தி = தோய்த்தாத்தி > தோத்தாத்தி > தோத்தாத்ரி. அத்தி = மலை; தென்பாண்டி நாட்டில் உள்ள வானமாமலை என்னும் சீவரமங்கை தான் தோத்தாத்ரி என்பாரும் உண்டு; அங்குமே தாந்தோன்றித் திருமேனி உண்டு. தோத்தாத்ரி இதுவா, அதுவா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.
(g)
திருச் சாலக் கம்மம் = பனிமலையிலிருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக்கம்மம்.
இது சாலக்கமம் > சாலக்கிராமம் > சாளக்கிராமம் என்று திரியும்;
யால மரமே சால மரம் என்றும், ஆச்சா மரம் என்றும் இக்காலத்தில் சொல்லப்படுகிறது. இதுபோகச் சாலக்கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயக் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite.

(h)
திரு நேமிக் காடு; நேமி = சக்கரம், வளையம்;
நும்முதல் > நுமுதல் > நமுதல் > நமுகுதல் = குழைதல், வளைதல்;
நமுக = வணங்குக; "நாராயண நமக" என்றால் "நாராயணனை வணங்குக" என்றே பொருள்; நமுக/நமக என்ற சொல்லை நாமம் என்ற பெயர்ப் பொருளாய்ப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
நமுதல் > நெமுதல் > நேமி; காடு > அரணம் > ஆரணம்; வடமொழியில் இது நைமிச ஆரண்யம் என்று ஆகும்; இது அலக ந(ந்)தை ஆற்றின் கரையில் உள்ளது.

(i)
திரு இலந்தைப் புரம்; இலந்தை = பத்ரி என்னும் பத்ரிநாத்; பட்டை = இலை, ஓலைப் பட்டை;
பட்டம் > பத்தம் > பத்ரம்;
அலக நந்தையும் தோலி கங்கையும் புணரும் இடத்தில், அலக நந்தைக் கரையில் உள்ளது திரு இலந்தைப் புரம்; இதைத் திரு அதரி எனச் சொல்லுவதும் உண்டு. இருந்த கோலத்தில் இறைவன் ஆசானாய் அருள் புரியும் தலம்.

(j)
திருப் புழைக் கரம் = புஷ்கரம்; அம்பு = நீர்; இந்தத் தலம் எங்கு உள்ளது என இதுவரை நான் அறிந்தேனில்லை. ஆனால் விண்ணவ மரபு இப்படி ஓர் இடத்தைச் சொல்கிறது. அறிந்தவர்கள்தான் விளக்க வேண்டும்.
(k)
தானே தோன்றுதல் = இங்கே இந்தத் திருமேனிகள் சொயம்புவாக (சுயம்புவாக), சொந்தாகக் கிடைத்ததாக ஐதீகம்;
தானே தோன்றியவை = ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்;
வியத்தல் > வியி > விழி;
சொந்தாய் வெளித்த தலம் = தானே வெளிப்பட்ட தலம்.

(l)
கதம் எட்டு = எட்டுக் கதங்கள் = எட்டு ஓசைகள்; மாலோனைக் குறிப்பிடும் எட்டெழுத்து மந்திரம். ஒவ்வோர் எழுத்தும் ஒரு திருமேனியாய் எட்டு இடத்தில் எழுந்ததாம்.
(m)
எட்டுத் தாந்தோன்றித் திருமேனிகளையும் ஓரிடத்தில் சேவிக்க வேண்டுமெனில் கண்ணபுரம் போனால் போதும் என்பது விண்ணெறியாளரின் நம்பிக்கை.

6. தாள் எறியால் நெற்றி வடு

6. தாள் எறியால் நெற்றி வடு
*******************************

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1)
மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2)
மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில்
செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க,
செழுங் கோயில் அரையர்(4) வந்து
"எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை
எங்கள் முனம் பொய்யா ன..தோ?"(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட
எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், "நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?" என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

1. கீழ்வீடு - 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் - மால்மேகன்

2. வளநாடன் - சோழன்
3. சென்னி - பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் - திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. "பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?" என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் - கைத்தாளம்
7. திகிரி - சக்கரம்.