Click Here for Free Traffic!
Click Here for your Free Traffic!

Your Ad Here

8. காயாம் பூ அரணங்கள்

8. காயாம் பூ அரணங்கள்
***************************

"ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற
அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு
ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம்
கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க்
காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க
பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப்
பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!

கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது இந்தப் பாடல். (விண்ணவச் சுடராழி ஆ.எதிராசன் எழுதிய "108 வைணவவ திவ்ய தேச வரலாறு" என்ற பொத்தத்தில் உள்ள விவரங்கள் இந்தப் பாடலுக்குப் பின்புலம்.)

கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப்போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) "ஆதி மூலமே" எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். "ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்" எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். "கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்" என்பது திருமங்கையாரின் வாக்கு.

கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப்போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.

கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,"நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்" என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், "ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக" என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,"வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு" என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.

திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. "வையம் தகளியாய்" என்று பொய்கையாரும், "அன்பே தகளியாய்" என்று பூதத்தாரும், "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.

6 மறுமொழிகள்:

At 6:07 AM, Anonymous ramachandranusha ramachandranushaசொல்லுவது என்னவெனில் ...

ஐயா, பிரபந்தம் என்பது வடமொழியா? பனுவல் என்ற சொல்லை பிரித்து பொருள் சொல்லுங்களேன்

 
At 6:08 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்புடையீர்,
ப்ரபந்தம் = கதை, தொடர்பு, பாமாலை.
பனுவல் = ஆகமம், கல்வி, சொல், நூல், புலமை.

இறைவனைப் பற்றிப் பாடிய பாமாலை. அதிலும் ஆகமக் கருத்துக்கள் அடங்கிய நூலாதலின் "பனுவல்" என விளிக்கப்பட்டுள்ளது.

 
At 6:08 AM, Anonymous kumaranசொல்லுவது என்னவெனில் ...

ஐயா, கஜேந்திரனுக்கு ஆதிமூலமானவன் வந்து வீடு பேறு அளித்தது தெரியும். காலைக் கவ்விய முதலைக்குமா வீடு பேறு தரப்பட்டது. முதலை சாப விமோசனம் பெற்று கந்தர்வன் ஆனது என்று தானே படித்திருக்கிறேன்.

 
At 6:09 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்பு குமரன்,

கூஹூ என்னும் அரக்கன், தண்ணீரில் மூழ்கிக் குளிப்போரின் கால்களை கவ்வித் துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்தா. அகத்தியனையும் துன்புறுத்த, அகத்தியன் கொடுத்த சாபத்தால் முதலையானான். ஆதிமூலத்தால் சாப நிவர்த்தியானான்.

கதைப் பொத்தகங்களில், சாப நிவர்த்தியானான் என மட்டும்தான் சொல்லப் படுகின்றது.

மாலவனைக் கண்டபின்னும் வீடுபேறு கிட்டாதா?
கண்ட யானைக்குக் கிட்டியது, முதலைக்குக் கிட்டாதா?

 
At 6:09 AM, Anonymous kumaranசொல்லுவது என்னவெனில் ...

ஐயா, நான் படித்தது ஹுஹூ என்ற கந்தர்வன் என்று. நீங்கள் அதே பெயருடைய அரக்கன் என்று படித்திருக்கிறீர்கள். :-)

நீங்கள் சொல்வது சரி ஐயா. மாலவனால் மரணமடைந்தால் மோக்ஷம் என்று தான் சமய நூல்களும் சொல்கின்றன.

 
At 6:09 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

கதையை விட்டுவிட்டு சாறை எடுத்துக்கொள்வோமே, குமரன்.

 

Post a Comment

<< இல்லம்